சிந்து நதியின் குறுக்கே நீண்ட தொங்கு பாலம் – இந்திய ராணுவம் சாதனை!

--

ஸ்ரீநகர்: சிந்து நதியின் மேலே, வெறும் 40 நாட்களில் நீண்ட தொங்கு பாலத்தை கட்டி முடித்ததன் மூலம், இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த பாலம் 260 மீட்டர் நீளம் கொண்டது. லே என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்காக, இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்திற்கு ‘மைத்ரி’ பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத்தொங்கு பாலத்தைக் கட்டுவதற்கு, 500 டன் எடையுள்ள கட்டுமானப் பொருட்கள் தேவைப்பட்டன. இந்தப் பாலத்தை திறந்து வைத்தவர்கள் கடந்த ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் சார்பில் போர்களில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்.

நாயக் பன்ஞ்சோக் அங்டுஸ் மற்றும் நாயக் ஷெஸ்வான் ஸ்டாப்டன் என்ற லடாக்கைச் சேர்ந்த இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் இதில் முக்கியமானவர்கள். ராணுவத்தினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான அமைதி மற்றும் நல்லுறவைப் பேணும் வகையில் ‘மைத்ரி’ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மூலம், லே மற்றும் லடாக் ஆகிய இடங்களைச் சார்ந்த சொக்லாம்ஸர், ஸ்டோக் மற்றும் சுகோட் ஆகிய தொலைதூரப் பகுதிகளை எளிதாக இணைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

– மதுரை மாயாண்டி