பாகிஸ்தான் மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல்?…ராணுவ தளபதி

டில்லி:

காஷ்மீரில் 3 போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச ராணுவ வீரர் ஒருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில்,‘‘ பயங்கரவாத செயலும், பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்க முடியாது. இந்த ஒரு காரணத்தாலேயே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்கவில்லை.

நாம் பாகிஸ்தான் அரசுக்கு தெளிவான தகவலை அனுப்பியுள்ளோம். பயங்கரவாதிகளை ஊக்குவிக்கவில்லை என தனது நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும். பேச்சுவார்த்தை குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் அரசு எடுத்தது சரியான முடிவு தான். மற்ற நாடுகளுக்கு எதிராக தனது மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என அந்நாடு கூடுகிறது.

ஆனால், பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அங்கு உள்ளன. பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருகின்றனர். பி.எஸ்.எப்., வீரரை கழுத்தறுத்து கொன்றது போன்ற கொடூர செயல்களை பாகிஸ்தான் செய்து வருகிறது. இது முதல் முறையல்ல. சர்ஜிக்கல் தாக்குதல் என்பது ரகசியமாக இருந்தால்தான் அது ஆச்சர்யமாக இருக்கும். எனவே அது ரகசியமாகவே இருக்கட்டும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து ‘‘பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது’’ என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.