ஸ்ரீநகர்: பயங்கரவாத இயக்கங்களில் இணைந்த காஷ்மீர் இளைஞர்களை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கு சரணடைதல் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான திட்டத்தை இந்திய ராணுவம் செயல்படுத்தி வருவதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடி மோதல்களில், பயங்கரவாத இயக்கங்களின் இளைஞர்களை கொல்வதைவிட, அவர்களுக்கு சரணடைதல் வாய்ப்பைக் கொடுக்கும் வகையிலான திட்டத்தை ராணுவம் பின்பற்றி வருவதாக தெரிவித்தார் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங், லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு.
“இளைஞர்களை மோதலில் கொல்வது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக இல்லை. அவர்கள், சற்று முன்னதாகத்தான் தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருக்கலாம்.
எனவே, அத்தகையோரை சரணடையச் செய்யும் வகையிலான திட்டத்திற்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். நீங்கள் துப்பாக்கியைத் தூக்கிவிட்டதாலேயே சாக வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது” என்றுள்ளார் ராணுவ உயரதிகாரி ராஜு.