புதுடெல்லி: சில நாட்களுக்கு முன்னர், ‍அமெரிக்க ராணுவ டிரோனை, ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து, அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ராணுவ டிரோன்கள் வாங்கும் திட்டம் குறித்து இந்திய ராணுவ தரப்பில், குறிப்பாக விமானப் படையில் யோசனை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடமிருந்து மொத்தம் 30 ‘பிரிடேட்டர் – பி’ டிரோன்களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது.

இதன் ஒட்டுமொத்த விலை மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால், சமீபத்தில், அமெரிக்காவின் RQ-4 ரக ராணுவ டிரோனை, பாரசீக வளைகுடாப் பகுதியில் ஈரானின் S-300 ஏவுகணை அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்து அமெரிக்க டிரோன்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், தரையிலிருந்து வானை நோக்கிப் பாயும் வகையில் வலுவான ஏவுகணை அமைப்பைக் கொண்டுள்ள நாடுகள். எனவே, அந்த நாடுகளுக்கு எதிராக நம்பகத்தன்மையற்ற டிரோன்களை பயன்படுத்துவது வீண் என்ற எண்ணம் எழுந்துள்ளது. மேலும், அந்த டிரோன்களின் அதிக விலையும் யோசனைக்கு முக்கிய காரணம்.

மிக அதிக விலை கொடுத்து குறைந்த பலன் கொண்ட டிரோன்களை வாங்குவதற்கு பதிலாக, அதேவிலையில் மிக அதிக பயன்களைக் கொண்ட விமானங்களை வாங்குவது மேலானது என்ற எண்ணமும் ராணுவத்தில் ஏற்பட்டுள்ளது.