ராணுவ ஆயுதங்களை விற்ற இந்திய வீரர்கள்

மணப்பாறை:

திருச்சி: மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் பழைய இரும்புக் கடை ஒன்றில் ராணுவ குண்டுகளை ராணுவ வீரர்களே விற்றது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில், கடந்த மாதம் 28ம் தேதி திடீரென குண்டு வெடித்தது. இதில் கடை ஊழியர் மாரிமுத்து என்பவர் பலியானார். உரிமையாளர் அருளானந்தம், கனகராஜ், பாலசுப்ரமணி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து காவல்துறையினனர் விசாரணை செய்ய துவங்கினர். கடந்த மாதம் 23 முதல் 26 வரை வீரப்பூர் வீரமலை வனப்பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த ரைபிள்ஸ் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தாங்கள் பயன்படுத்திய, வெடிக்காத குண்டைகளை, இந்த பழைய இரும்புக் கடையில் சில ராணுவ வீரர்கள் விற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும், தடயவியல் துறையினரும் காவல்துறையினருடன் இணைந்து அந்த கடையில் வேறு எதாவது குண்டுகள் இருக்கின்றதா என ஆராய்ந்தனர்.

அப்போது சாக்குமூட்டை ஒன்றில் இருபதுக்கும் மேற்பட்ட குண்டுகள் சிக்கின. அவை ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் அதிவேக குண்டு என தெரியவந்தது. குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளர் அருளானந்தத்துக்கு நேற்று முன்தினம் நினைவு திரும்பியது. அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

அவர், ‘ கடந்த 27ம் தேதி பச்சை நிற ராணுவ ஜிப்சியில் வந்த ராணுவ வீரர்கள் இருவர், 45 கிலோ எடையுள்ள குண்டுகளை விற்க விரும்புவதாக கூறினார். வெடிகுண்டு என்பதால் நான் வாங்க மறுத்தேன்.

அவர்களோ, இந்த குண்டுகள் வெடிக்காது என்றனர். ஒரு கிலோ ரூ.80 என 45 கிலோவுக்கு ரூ.3,600 பெற்று சென்றனர்” என்று தெரிவித்தார். ராணுவ வீரர்கள் தான் குண்டுகளை விற்றனர் என உறுதியாகியுள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னையில் உள்ள தென் பிராந்திய ராணுவ தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.