Random image

இந்திய ராணுவத்தில் 150000 பேர் வேலை இழக்கும் அபாயம்

டில்லி

ந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களில் 150000 பேர்  இன்னும் 4-5 வருடங்களில் பணி இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தேவையற்ற பணியாளர்களை நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் திட்டமிட்டது.   அப்போதைய கணக்கெடுப்பின் படி சுமார் 57000 பணியாளர்கள் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டது.    அவர்களை வேறு பணிக்கு மாற்றுவது அல்லது விருப்ப ஓய்வு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் தேவையற்ற செலவு குறையும் எனவும் மீதமுள்ள பணியாளர்களின் பணித்திறன் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது.   அத்துடன் இந்த நடவடிக்கையை மேலும் தொடரலாம் என அரசு கருத்து தெரிவித்தது.   இது குறித்து ஆராய ராணுவ செயலர் சந்து தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.   அந்தக் குழு ராணுவத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள பணியாளர்கள், அவர்களின் பணித்திறன் மற்றும் பணிச்சுமை பற்றி ஆராய்ந்தது.

அந்த குழு அளித்த அறிக்கையில் , “ ராணுவத்தின் பல துறைகளை ஒன்றிணைப்பதால் பணித்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  மேலும் அதனால் பணியாளர்களை குறைத்து செலவை கட்டுக்குள் கொண்டு வரலாம். அந்த நிதியை போர்க்கால நடவடிக்கைகளுக்கு உபயோகப் படுத்தலாம்

அவ்வகையில் வரும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50000 பணியாளர்களை குறைக்கலாம்.   அத்துடன் வரும் 2022-23க்குள் மேலும் 1,00,000 பணியாளர்களை குறைக்கலாம்.   இந்த குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்” என அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.   அரசு இது குறித்து விரைவில் தனது முடிவை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.