மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது அந்தப் பதவியில் விக்ரம் ரதோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாரத் அருணும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் அதே பதவிகளில் தொடர்கிறார்கள்.

எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர், கடந்த 4 நாட்களாக 88 விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தபிறகு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது, சில முன்னேற்றங்கள் தெரிவதைக் காணலாம். அதேசமயம், எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டு டி-20 தொடர்களை மனதில் வைத்து சில மாற்றங்களை செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவேதான் இந்த முடிவு.

மற்றபடி, ‍நேர்காணல் நடைமுறைகள் மற்றும் தேர்வு செயல்பாடுகள் அனைத்தும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையிலேயே நடைபெற்றன” என்றார் பிரசாத். உலகக்கோப்பை இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சினை மற்றும் அரையிறுதியில் அடைந்த தோல்வி தொடர்பாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மீது விமர்சனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.