கொல்கத்தா

ல்வேறு விசாரணைகளால் இந்தியத் தொழிலதிபர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கஃபே காஃபிடே அதிபர் சித்தார்த்தா காணாமல் போய்  ஆற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலையால் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. சித்தார்த்தா எழுதியதாக வெளியாகிய கடிதத்தில், “நான் 17 வருட கடின உழைப்புக்குப் பிறகு 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளேன். அதைத் தவிர எனது தொழில் நுட்ப நிறுவனங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர்.

அப்படி இருந்தும் எனது தொழிலை நான் லாப நோக்கில் எடுத்துச் செல்வதில் தோல்வி அடைந்துள்ளேன். நான் என் மேல் நம்பிக்கை வைத்த அனைவரிடமும் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நான் வாங்கிய ஏராளமான கடனை திருப்பித் தர அவர்கள் தொந்தரவு செய்தனர். அது மட்டுமின்றி வருமான வரித்துறையினரும் எனக்குத் தொல்லை அளித்தனர். நான் யாரையும் ஏமாற்றவோ தவறான திசையில் செலுத்தவோ எண்ணவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் வருமான வரித்துறை இதற்கு மறுப்பு தெரிவித்தது. அத்துடன் சித்தார்த்தா மீது வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது முகநூலில், “பல்வேறு விசாரணை  முகமைகளால் இந்தியத் தொழிலதிபர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். பிரபல தொழிலதிபரான காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த் மரணமடைந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல்வேறு முகமைகளின் நெருக்கடியால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்துள்ளார்.

பல்வேறு வட்டாரத் தகவல்கள் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கடும்  நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக சொலி வருகிறது. இந்த கொடுமை தாளாமல் சிலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் சிலரும் வெளியேறி  வருகின்றனர். இதைப் போலவே எதிர்க்கட்சிகளும் குதிரை பேரம், நெருக்கடி, அரசியல் பழி வாங்குதலால் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன ” எனத் தெரிவித்துள்ளார்.