இந்திய – இலங்கை கடல் எல்லையில் தீவிர பாதுகாப்பு

டில்லி

லங்கையில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க இந்திய கடலோரக் காவல்படை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன.

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்க்ள் மரணம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை தேவாலயங்கள் சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இதை ஒட்டி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்த குண்டு வெடிப்பை தேசிய அபாயமாக அறிவித்துள்ளார்.

நேற்று நடந்த தாக்குதலில் சுமார் 40 வெளிநாட்டவர்கள் மரணம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை இலங்கை காவல்துறை தேடி வருகிறது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தவ்ஹீத் ஜமாத் காரணமாக இருக்கலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச் செல்லலாம் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மும்பை நகரில் நடந்த 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவில் புகுந்துள்ளனர்.

அதை ஒட்டி இந்திய கடலோரக் காவல்படை இந்திய இலங்கை எல்லையில் தனது பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அத்துடன் கண்காணிப்பு கப்பல்களும் டர்னியர் ரக கண்காணிப்பு விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நமது நாட்டின் சில பகுதிகளிலும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்னும் அடிப்படையில் இந்த கண்காணிப்பு நடந்து வருகிறது.