வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள 155 இந்திய நிறுவனங்கள் மூலம், அந்நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக இந்திய தொழில்கள் கூட்டமைப்பான சிஐஐ தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 2 ஆயிரத்து 200 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. அதன்மூலம் வாஷிங்டன், போர்ட்டோரிகோ, டெக்சாஸ், காலிபோர்னியா, நியூஜெர்சி, ஃப்ளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, டெக்சாஸ் மாகாணத்தில் அதிகபட்சமாக 17,578 வேலை வாய்ப்புகளும், கலிஃபோர்னியா மாகாணத்தில் 8,271 வேலைவாய்ப்புகளும், நியூஜெர்ஸி மாகாணத்தில் 8,057 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

டெக்சாஸ் மாகாணத்தில் 905 கோடி அமெரிக்க டாலர்களும், நியூஜெர்ஸி மாகாணத்தில் 240 கோடி அமெரிக்க டாலர்களும், நியூயார்க்கில் 180 கோடி அமெரிக்க டாலர்களும் முதலீடு செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.