இந்திய கிரிக்கெட் வீரர் இலங்கையில் பலி

இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதே போல, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்துகொண்டிருக்கும் இந்திய வீரர்கள் 19 பேர் இலங்கை வந்துள்ளனர். இவர்கள் பமுனுகம ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று மாலை ஓட்டலி்ன் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தபோது அகால மரணமடைந்ததாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இறந்தவீரர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது வீரர் என்றும் இலங்கை காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.  இறந்தவர் குறித்து மேலதிக விபரங்களை இன்னும் இலங்கை காவல்துறை வெளியிடவில்லை.

இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.