சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஆக பதவி ஏற்கும் ஹலீமா இந்தியாவின் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் சிங்கப்பூரின் அதிபராக இருந்த டோனி டான் கெங் யாம் பதவிக்காலம் முடிவடைந்தது.  அதனால் புதிய அதிபருக்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடக்க இருந்தது.  அதற்கான வேட்பு தாக்கல் நேற்று (13ஆம் தேதி) வரை நடை பெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த தேர்தலில் சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஹலீமா யாகுப் உட்பட 5 பேர் போட்டி இடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் சிங்கப்பூரின் சட்ட விதிகளின் படி ஹலீமாவுக்கு மட்டுமே போட்டியிடும் தகுதி இருந்தது.   அதனால் வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த உடன் அவர் சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஹலீமா வுக்கு வயது 63.  இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.  இவர் சிங்கப்பூரின் ஆளும் கட்சியான பி. ஏ. பி கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.  அதிபர் தேர்தலில் போட்டியிட தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.   இவர் சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் ஆவார். அத்துடன் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்னும் பெருமையையும் பெறுகிறார்.