சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பாலியல் புகாரின் பேரில் இந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மிரட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குநராக (நலப்பணிகள்) பணிபுரிந்து வருபவர் டாக்டர் விஜயன் மதமடக்கி. இவர் அரசு மருத்துவ அலுவலராக பணிபுரிந்தபோது 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி  செய்துள்ளார். 13 முறை கலெக்டர் மற்றும் பிற துறை அதிகாரிகளிடம் சிறந்த மருத்துவருக்கான விருதுகள் பெற்றுள்ளார்.

பெண் மருத்துவரின் புகாரில் உண்மை இல்லை என்று அறிவித்த ஆட்சியர் அலுவலக அறிக்கை

இவர்  சிவகங்கை மாவட்டத்தில் பணிக்கு சரியாக வராத மற்றும், அரசு மருத்துவமனைக்கு வரும் பிரசவ பெண்களை தனியார் மருத்துவமனைக்கு வரச் செய்து பணம் வாங்கிக்கொண்டு பிரசவம் பார்ப்பதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வந்த சில பெண் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மூலம் மருத்துவ இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி மீது,  பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக  குற்றம் சாட்டி  சிவகங்கை கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர்கள் வானதி (வளர்ச்சி), மேரிதபித்தாள் (சட்டம்) உட்பட 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகார் மனு குறித்து மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம்  விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் மருத்துவ இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி மீதான புகாரில் உண்மை இல்லை என்பதும், துறை ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர்கள் பொய் புகார் அளித்திருப்பதும் தெரிய வரவே புகார் மனுவை விசாரண குழுவினர் தள்ளுபடி செய்தனர்.

அதன் பிறகு டாக்டர் விஜயன் மதமடக்கிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு அளித்தனர். சிவகங்கை டி.எஸ்.பி., சக்கரவர்த்தி அனுமதி தர மறுத்து விட்டார். போலீஸ் அனுமதி மறுப்பையும் மீறி மருத்துவ இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி குறித்து அவதூறு பரப்பும் நோக்கத்துடன் சுவரொட்டிகள் ஒட்டியதுடன் சிவகங்கை தாய்-சேய் மருத்துவமனை முன் வாயில் கூட்டம் நடத்தி டாக்டர் விஜயன் மதமடக்கி குறித்து தரக்குறைவாக பேசியுள்ளனர். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

‘தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தனது புகழுக்கு களங்கம் விளைவித்து வரும் சிவகங்கை மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி சிவகங்கை மருத்துவ இணைஇயக்குனர் விஜயன் மதமடக்கி  போலீஸ் எஸ்.பி.ஜெயச்சந்திரனிடம் புகார்  மனு அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.