பாரிஸ்:

பாரிஸ் ரெயில் நிலையத்தில் இந்திய வைர வியாபாரிகளிடம் இருந்து 3.70 லட்சம் டாலர் மதிப்பிலான நவரத்தின கற்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

தொழில் நிமித்தமாக பாரிஸில் நடந்த ஒரு கூட்டத்தில் 2 இந்திய வைர வியாபாரிகள் சில தினங்களுக்கு முன் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்து பாரிஸ் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற இருவரையும் ஒரு கும்பல் தாக்கி அவர்கள் வைத்திருந்த ஒரு பையை பறித்துக் கொண்டு ஓடினர்.

இதில் விலை மதிப்பற்ற அரிய வகையை சேர்ந்த நவ ரத்தின கற்கள் பல இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 3.70 லட்சம் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். இவை வைரங்கள் கிடையாது. இது முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதலாக இருந்துள்ளது.

பாரிஸில் வைர வர்த்தக மையமாக விளங்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாக பாரிஸில் இதுபோன்று நகைகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. சமீபத்தில் ரிட்ஸ் ஓட்டலில் கடந்த மாதம் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.

துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பல் ஹோட்டலின் தரை தளத்தில் இருந்த நகை கடையை உடைத்து கொள்ளைடித்து சென்றது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு சய்யப்பட்டுள்ளது.