சிங்கப்பூர்

மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதிகள் நடு வானில் ஒரு ஆஸ்திரேலிய மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர்.

மும்பை நகரில் உள்ள கல்யாண் மேற்கு பகுதியில் மருத்துவர்களான நிதின் ஜபக்  மற்றும் அவர் மனைவி  நீதா ஜபக் ஒரு பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகின்றனர்.   கடந்த மாதம் 31 ஆம் தேதி இருவரும் தங்கள் விடுமுறையை கழிக்க ஆஸ்திரேலியா சென்றனர்.   விடுமுரை முடிந்து சென்ற வார இறுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்தில் இரவு 9.10 க்கு ஏறினார்கள்.

விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த ஆனி என்னும் 63 வயது பெண் பயணி தீடீஎன வியர்த்துக் கொட்டி மயங்கி விழுந்தார்.     மருத்துவர் உதவி கேட்டு வந்த அறிவிப்பை தொடர்ந்து நிதின் மற்றும் நீதா தம்பதிகள் உடனடியாக உதவிக்கு விரைந்தனர்.  சுய உணர்வின்றி இருந்த ஆனிக்கு முதல் உதவி மூலம் உணர்வை கொண்டு வந்தனர்.

ஆயினும் ஆனியின் நாடித் துடிப்பு தொடர்ந்து குறைவாகவே இருந்துள்ளது.  அதனால் அவருக்கு ஆக்சிஜன் மூலம் சுவாசத்துக்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.   அதனால் அவரது நாடித் துடிப்பு ஓரளவு சீரடைந்தது.   ஆனிக்கு இதயக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நிதின் தம்பதியர் அஞ்சியதால் அவருக்கு ஆஸ்பிரின் உள்ளிட்ட மருந்துகளை அளித்து தடையற்ற இரத்த ஓட்டம் ஏற்பட நடவடிக்கை எடுத்தனர்.

அந்த விமானத்தில் உயிர் காக்கும் உபகரணங்கள் இருந்த போதிலும் குளூகோசை ஊசி மூலம் செலுத்த ஊசி போட தேவையான வெளிச்சம் இல்லை.   மொபைல்கள் மற்றும் டார்ச்சுகளின் வெளிச்சம் போதுமானதாக இல்லை.   ஆனால் குழந்தைகள் மருத்துவரான நீதா தனது அனுபவத்தைக் கொண்டு ஆனியின்  இரத்த குழாயை கண்டறிந்து ஊசியை செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் வழியில் எங்காவது அவசரத்துக்கு விமானத்தை இறக்கினால் அதில் பயணிக்கும் 300 பேர் தவிக்க நேரிடும் என விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.   தேவைப்பட்டால் வழியில் இறக்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.     ஆனியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் விமானப் பயணம் தொடர்ந்தது.

சிங்கப்பூரில் உள்ள செங்கி விமான நிலையத்தில் விமானம்  இறங்கியதும் ஆனி தயாராக இருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.   தற்போது சிகிச்சைக்கு பிறகு ஆனியின்  உடல் நலம் தேறி வருவதாக அவர் நிதின் தம்பதிகளுக்கு நன்றியுடன் தகவல்கள் அனுப்பி உள்ளார்.

ஆனிக்கு ஆக்சிஜன்பற்றாக்குறையால் இந்நிலை உண்டானதாகவும் உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் அவர் மரணம் அடைந்திருப்பார் எனவும் சிங்கப்பூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.