கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்கு விருந்து அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா

ங்களிடம் கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விருந்து அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.  இதில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா விளையாட்டரங்கில் முதல் சோதனை பந்தயம் நடந்தது.   இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.    இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாம் மற்றும் இறுதிப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

இந்த போட்டியை முன்னிட்டு 5 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒரு டாக்சி மூலம் கப்பா மைதானத்துக்குச் சென்றுள்ளனர்.   அந்த டாக்சியை ஓட்டிய இந்தியர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் கட்டணம் வாங்க மறுத்துள்ளார்.    டாக்சியில் சென்ற 5 வீரர்களும் தொடர்ந்து வற்புறுத்தியும் கிரிக்கெட் ரசிகரான அந்த ஓட்டுநர் கட்டணம் வாங்கவில்லை.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த ஓட்டுநருக்கு இரவு விருந்து அளித்துள்ளனர்.    ஷாகின் ஷா அஃப்ரிடி, யசிர் ஷா, மற்றும் நசீம் ஷா உள்ளிட்ட அந்த ஐந்து வீரர்களும் தனக்கு இரவு விருந்து அளித்ததை அந்த டாக்சி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.   இது டிவிட்ட்ரில் பகிரப்பட்டு பலரும் இந்நிகழ்வுக்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.