இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விட குறைவாக உள்ளது : ஐ எம் எஃப் 

டில்லி

ந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதாக ஐ எம் எஃப் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாகப் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன.  இந்த கணக்கு வருடத்தின் முதல் காலாண்டான ஏப்ரல் வரை ஜூன் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் ஜிடிபி தொடர்ந்து 5% குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆயினும் மத்திய அரசு வரும் 2024க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் எனக் கூறி வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், “மத்திய அரசின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது வெறும் பகல் கனவாகும்.   தற்போது பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை மத்திய அரசால் புரிந்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது மிகவும் பயங்கரமான சூழ்நிலை ஆகும்.” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

ஐ எம் எஃப் எனப்படும் சர்வதேச நிதி மேம்பாட்டு அமைப்பின் செய்தித்  தொடர்பாளர் கெர்ரி ரைஸ் செய்தியாளர்களிடம், “தற்போது இந்தியாவில் அனைவரிடமும் பொருளாதார வளர்ச்சி விகிதக் குறைவு  குறித்து சந்தேகம் உள்ளது.  அது குறித்து நான் தெரிவிப்பது என்னவென்றால்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதே ஆகும்.

இந்த பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகக் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நிறுவனங்களின் வளர்ச்சி நிலையில் தற்போது ஒரு ஸ்திரத்தன்மை இல்லாததே  ஆகும்.   இது வங்கிகளில் மட்டுமின்றி வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களையும் வலுவிழக்கச் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.