காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது : பிரணாப் முகர்ஜி

டில்லி

காங்கிரஸ் அரசால் தான் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பாஜக அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை அளித்தார்.  அப்போது அவர் இந்திய பொருளாதாரத்தை வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்த்த டவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதில் அளித்துள்ளார்.

நேற்று டில்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. “மத்திய நிதி அமைச்சர் நாட்டின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.    பொருளாதார உயர்வு என்பது திடீரென வானத்தில் இருந்து குவித்து விடாது.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அடிக்கல் சுதந்திரத்துக்குப் பிறகு கங்கிரஸால் நாட்டப்பட்டது.

இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்ற ஜவகர்லால் நேரு ஐஐடி, இஸ்ரோ, ஐஐஎம் மற்றும் வங்கித்துறை போன்ற சேவைகளை ஏற்படுத்தினார்.  இந்த சேவைகள் நாட்டின் பொருளாதாரம் உச்சத்தை எட்ட முக்கிய காரணமாக இருந்தது.  அதன் பிறகு நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சியில் தாராளமயமாக்கல் ஏற்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேலும் விரிவடைந்தது.

தற்போதைய அரசு கடந்த கால காங்கிரஸ் அரசைக் குறை கூறும் முன்பு சுதந்திரத்துக்குப் பின் நடந்த 55 ஆண்டு காங்கிரஸ் அரசால் நாட்டின் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைக்க வேண்டும்.  ஆரம்பத்தில் பூஜ்ஜியமாக இருண்ட நாட்டின் பொருளாதாரத்தை தற்போதுள்ள 180000 கோடி டாலர்  அளவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் அரசாகும்.  அதனால் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்தது” என தெரிவித்துள்ளார்.