கடைசிக் காலாண்டில் 4.7% வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம்?

மும்பை: கடந்தாண்டு(2019) அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலாண்டில், இந்தியப் பொருளாதாரம் 4.7% வளர்ச்சியடைந்துள்ளதாக ‘ரியூட்டர்ஸ் போல்’ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது; வருடாந்திர ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, முடிவடைந்த கடைசி காலாண்டில் 4.7% வளர்ச்சியடைந்துள்ளது. அந்த வளர்ச்சி அதற்கு முந்தைய காலாண்டில் 4.5% என்பதாக இருந்தது.

கடந்த கடைசிக் காலண்டின் பொருளாதார வளர்ச்சி 5% அல்லது அதற்கும் கீழாகவே இருக்கும் என்று 90% பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். நாட்டின் பொருளாதாரம் கடும் இக்கட்டில் மாட்டியிருக்கும் சூழலில், இந்த வளர்ச்சி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

அதேசமயம், இந்த வளர்ச்சியானது, கடந்த ஜனவரியில் உயர்ந்த 7.59% என்ற சில்லறைப் பணவீக்கத்தால் பாதிப்படையும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், இந்தப் பணவீக்கம் தேவை மற்றும் நுகர்வைக் கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிபர அலுவலகம், 2019-2020 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 6.1% என்பதிலிருந்து 5.0% என்பதாக ஏற்கனவே குறைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.