கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்த இந்தியத் தொழிலதிபர்

மாசசூசெட்ஸ்

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மாடெர்னா நிறுவனத்தில் இந்தியத் தொழிலதிபரும் விப்ரோ நிறுவன அதிபருமான அஸிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார்.

உலகெங்கும் கடும் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க பல சர்வதேச மருந்து நிறுவனங்கள் தடுப்பூசியைக்  கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளன.  இதில் அமெரிக்க நிறுவனமான மாடெர்னா பயோடெக் முன்னணியில் உள்ளது.  இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டதில் முதல்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

இது குறித்து மாடெர்னா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல், “கொரோனா தடுப்பூசி சோதனையில் முதல் கட்டமாக சுண்டெலி சோதனையில் எங்கள் மருந்து வெற்றி அடைந்துள்ளது.   இந்த மருந்தின் அடுத்தடுத்த சோதனைகள் விரைவில் நடைபெற உள்ளன.  வரும் ஜூலைக்குள் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது.

அதில் வெற்றி கண்டால் இந்த மருந்தை அங்கீகாரத்துக்கு அனுப்ப உள்ளோம்  இந்தானுமதி கிடைத்ததும் அதிக அளவில் இந்த மருந்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்  இதன் மூலம் கோவிட் 19 தாக்குதலில் இருந்து உலக மக்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.” என அறிவித்துள்ளார்.

மாடெர்னா நிறுவனத்துடன் இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.   இந்நிறுவனத்தில் விப்ரோ நிறுவன அதிபரும், சமூக சேவகருமான அஸிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளதாக  தகவல்கள் வந்துள்ளது.   இந்த செய்தியை அஸிம் பிரேம்ஜியின் நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் பங்குதாரர் தீரஜ் மல்கானி வெளியிட்டுள்ளார்.

அஸிம் பிரேம்ஜியின் நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட் கடந்த 2006 முதல் 40 நாடுகளில்  முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தகக்தாகும்.