விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கடற்படையின்  கடற்படை பிரிவின் விமான தளமான ஐ.என்.எஸ். டேகா  விசாகப் பட்டினத்தில் உள்ளது.
இங்கிருந்து ரோந்து பணிக்காக தினமும் காலை 10 மணி அளவில் மிக்–29 கே ரக போர்விமானம் புறப்பட்டுச் செல்லும். நேற்றும் வழக்கம் போல் மிக்–29 கே போர் விமானம் ரோந்து பணிக்காக கிளம்பியது. ஆனால், விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு மேலே எழுந்தபோது, விமானத்தின் வெளிப்புற எரிபொருள் டேங்குகளில் ஒன்று கழன்று கீழே விழுந்தது.
இதன் காரணமாக ஓடு பாதையில் தீ பற்றிகொண்டது. உடனே பாதுகாப்பு வீரர்கள் தீயை அணைத்து ஓடுபாதையை சரி செய்தனர்.

விமானத்தின் உடைந்து விழுந்த எரிபொருள்  டேங்க்
விமானத்தின் உடைந்து விழுந்த எரிபொருள் டேங்க்

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி வெளிப்புறமுள்ள அடுத்த எரிபொருள் டேங்கான,  2–வது எரிபொருள் டேங்கை கடல்பகுதியில் அகற்றும்படி விமானிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விமான கட்டுப்பாட்டு அறையில் கோளாறு காரணமாக விமானிகளுக்கு சரியான சிக்னல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 2 வது டேங்கு  அகற்ற முடியவில்லை.
இந்தநிலையில் அந்த விமானம் தரையிறங்குவதற்காக, விமானதளம் நோக்கி திரும்பி வரும்போது  2–வது டேங்கும் கழன்று கீழே விழுந்துவிட்டது.
இந்திய கப்பற்படைக்கு சொந்தமான  போர் விமானத்தின் 2 எரிபொருள் டேங்குகளும் கீழே விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இச்சம்பவத்தில் விமானிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
இதுபற்றி விசாரணை நடத்துவதற்கு கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஏற்கனவே  கடந்த ஜூலை 22ந்தேதி 29 பேருடன் அந்தமான் சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏஎன்32 ரக விமானம் மாயமானது. 50 நாட்களுக்கு மேலாகியும் காணாமல்போன விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்போதும் விமானம் சரிவரி பராமரிப்பு இல்லாததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
அதற்குள் தற்போது மற்றொரு கடற்படை விமானத்தில் ஓடும்போதே எரிபொருள் டாங்க் கழன்று விழுகிறது என்றால், நமது கடற்படை விமானத்தின் தரம் எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.