தாய்லாந்து : குகையில் சிக்கியவர்களை காத்த இந்திய நிறுவனம்

புனே

ந்திய நகரமான புனேயை சேர்ந்த ஒரு நிறுவன தாய்லாந்து நாட்டின் குகையில் மாட்டியவர்களை காக்க பெரும் தொண்டு ஆற்றி உள்ளது.

இந்திய நிறுவனமான கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது,  இந்த நிறுவனம் மோட்டார்கள், பம்புகள் மற்றும் கம்பிரசர்களை உற்பத்தி செய்து வருகின்றது.   இந்தியாவில் மட்டும் இன்றி உலகெங்கும் பல நாடுகளில் இந்த நிறுவனத்துக்கு கிளைகள் உள்ளன.

தாய்லாந்தில் உள்ள தம் லுவாங் குகைக்குள் சென்ற 12 சிறுவர்களும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உள்ளே மாட்டிக் கொண்டனர்.    மீட்புப் படையினரால் முதலில் அவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.   பிறகு இங்கிலாந்து நாட்டு நீச்சல் வீரர்கள் அவர்கள் குகையினுள் உயிருடன் இருப்பதை கண்டறிந்தனர்.

சகதியும் வெள்ளமும் நிறைந்த அந்த குகையில் நீச்சல் தெரியாத சிறுவர்களை மீட்க முடியாது என்பதால் வெள்ளம் வடியும் வரை காத்திருக்க முடிவு செய்தனர்.   ஆனால் மீண்டும் கன மழை பெய்யும் என அறிவிப்பு வந்ததால் நீரை வெளியேற்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை உதவிக்கு மீட்புக் குழு நாடியது.

இந்திய தூதரகம் மூலம் விவரம் அறிந்த கிர்லோஸ்கர் நிறுவனம் தங்களின் பம்புகள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினரை அனுப்பி வைத்தது.   அந்நிறுவனம் தனது பம்புகளை நிறுவி குகையில் இருந்த தண்ணீரையும் சகதியையும் வெளியேற்றியது.   நீர் மட்டம் குறைந்து சிறுவர்கள் வெளியேற வசதி ஏற்பட்டது.  தற்போது குகையில் சிக்கிய 13 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.