கொரோனா வளை கோட்டுக்குப் பதில் ஜிடிபியை இந்தியா தட்டையாக்கி விட்டது : ராஜிவ் பஜாஜ்

டில்லி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் உரையாடிய பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குநர் ராஜிவ் பஜாஜ் ஊரடங்கை விமர்சித்துள்ளார்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது.  ஆனால் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காததால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.    கொரோனா பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  இதனால் நாட்டில் பலர் பணிக்குச் செல்ல முடியாமல் துயருற்று வருகின்றனர்.

நாட்டின் பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல நிபுணர்களுடன் உரையாடி வருகிறார்.   அந்த வரிசையில் அவர் பிரபல தொழிலதிபரான பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குநர் ராஜிவ் பஜாஜ் உடன் சமூக ஊடகத்தில் உரையாடினார்.  இந்த உரையாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அப்போது ராகுல் காந்தியிடம் ராஜிவ் பஜாஜ் ஊரடங்கு குறித்து, “ஊரடங்கைப் பாதுகாப்பு இல்லாமல் அறிவித்து நான் கொரோனா வைரஸ் பரவுவதை உறுதி செய்துள்ளோம்.  அதை ரத்து செய்யும் போது மீண்டும் அது  தாக்கும்.  ஆகவே நீங்கள் கொரோனா வரைஸ் பரவுதல் என்னும் பிரச்சினையை ஊரடங்கு மூலம் தீர்க்கவில்லை.

நீங்கள் கொரோனா கிருமி பரவும் வளை கோட்டை தட்டையாக்க வில்லை.  அதற்கு மாறாக உள்நாட்டு மொத்த உற்பத்தி என அழைக்கப்படும் ஜிடிபி வளைகோட்டை தட்டையாக்கி விட்டீர்கள்.

முழு அடைப்பு என்னும் ஊரடங்கு முறையானது காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு முழு அடைப்பாகும்.  உலகில் எங்குமே இது போல் நடக்கவில்லை.   இந்தியாவில்  ஏற்கனவே காசநோய், வயிற்றுப்போக்கு நிமோனியா போன்ற நோய்கள் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரைக் குடித்து வருகின்றன.    அவற்றை விட்டு விட்டு கொரோனாவுக்கான ஊரடங்கு நடப்பது இப்போது முதல் முறையாகும்.

கொரோனா பரவுதலுக்கு முன்பு ஒருவர் ஆப்பிரிக்காவில் தினசரி 8000 குழந்தைகள் மடிவதாகக்  கூறி உள்ளார். ஆனால் நாம் இவற்றை ஒரு அளவுக்குமேல் கண்டுகொள்வதோ கவலைப்படுவதோ கிடையாது.  இந்த நோய் வளர்ந்த நாடுகளையும் வெகுவாக தாக்கி உள்ளது.  பணக்காரர்கள் பாதிப்பு அடைந்தால் தான் தலைப்புச் செய்திகளில் அது வரும்

அவ்வகையில் வளர்ந்த நாடுகளில் செல்வம் மிகுந்த மக்கள் பாதிக்கப்படுவதால் கொரோனா தொற்று பரபரப்பாகி உள்ளது.

நாம் உண்மைகளை வெளியிடுவதில் குறைபாட்டுடன் உள்ளோம்.  கொரோனா தொற்று என்பது புற்று நோய் போன்றதாகும்.இது முழுமையாகக் குணம் அடைய நீண்ட காலம் ஆகும் என மக்கல் நினைத்து வருத்தம் கொள்கின்றனர்.  இந்தப் பிரச்சினையில் இருந்து இந்தியா தன்னை நிரந்தரமாக பாதுக்காத்துக்கொள்ள முடியாது.  இதில் இருந்து நீந்தித்தான் கரை சேர முடியும்” என தெரிவித்துள்ளார்.