21 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுடன் மோதும் இந்திய கால்பந்து அணி

கால்பந்து அணியின் உலக தரவரிசையில் 75வது இடத்தில் உள்ள சீனா உடன், 97வது இடத்தில் உள்ள இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டியில் 21 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட உள்ளது.

ஆசிய கால்பந்து தொடர் 2019ம் ஆண்டு தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஆசிய போட்டியில் விளையாடுவதற்கு முன்பு உலக தரவரிசையில் சிறப்பாக விளங்கும் கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியாக விளையாட நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கேட்டுக் கொண்டார்.

indian-foot-ball-team

அவரின் இந்த கோரிக்கையை ஏற்ற இந்திய கால்பந்து சங்கம் சீனாவுடனான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டி அக்டோபர் மாதம் 8ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற இருக்கிறது. எனினும் போட்டியை 13ம் தேதி வைத்துக் கொள்ளுமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இதுவரை 17 முறை மோதி உள்ளன. இதில் இந்தியா ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. 12 முறை சீனா வெற்றிப்பெற்ற நிலையில் 5 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. கடைசியாக 1997ம் ஆண்டு நேரு கோப்பையில் இரு அணிகளும் மோதின. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் இரு நாட்டு அணிகளும் மோத உள்ளன. முதல் முறையாக இந்தியா சீனாவிற்கு சென்று விளையாட உள்ளது.

இரு வருடங்களாக இந்திய கால்பந்து அணி மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நடைபெற்ற 12 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி சாதனை படைத்து வருகிறது.

இது குறித்து இந்திய கால்பந்து அணியின் கேப்டன் கூறுகையில் “ ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில், இந்த வாய்ப்பை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். சீனா உடனான விளையாட்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக எங்களை சோதித்துக் கொள்வதற்கு சிறந்ததாக இருக்கும்” என்றார்.