அன்னிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்தது : பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை
டில்லி
இந்திய ரூபாய் மதிப்பு இந்த வருடம் சுமார் 12% வரை குறைந்ததால் அன்னிய செலாவணி $3993 கோடியாக குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது சரிந்து வருகிறது. தினம் தோறும் அது வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக துருக்கி நாணயமான நிராவின் மதிப்பு திடீரென சரிந்தது என கூறப்படுகிறது. அனைத்து ஆசிய நாடுகளிலும் நாணய மதிப்பு குறைந்து வந்த போதிலும் இந்தியாவில் அது அதிக அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாட்டிலும் இறக்குமதிக்காகவும், குறைந்த கால கடன்களை திருப்பி தரவும் அன்னிய செலாவணி கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது வழக்கமாகும். அவ்வகையில் இந்தியாவும் தனது அன்னிய செலாவணியை குறையாமல் கவனித்து வந்தது. ஆனால் இந்த வருடம் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 12% வரை குறைந்துள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும்.
இதை ஒட்டி தற்போது இந்திய செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்துள்ளது. தற்போது $3993 கோடியாக ஆகி உள்ளது. தற்போதைய நிலையில் இதனால் உடனடி பாதிப்பு எதுவும் இல்லை எனவும் இந்த கையிருப்பை கொண்டு சுமார் 8 அல்லது 9 மாதங்கள் மட்டுமே வெளிநாட்டு வர்த்தகங்கள் நடைபெறும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கையிருப்பை அதிகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கியின் உடனடி நடவடிக்கைகள் தேவை எனவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.