டில்லி:
டாக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய இளம்பெண்ணின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், 20 பிணைக்கைதிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தகவல் அறிந்து வந்த அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகளில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் தருஷி ஜெயினும் ஒருவர். இவர் டாக்காவில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்று, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

தருஷி
தருஷி

இவரது தந்தை சுமார் 20 ஆண்டுகளாக வங்காளதேசத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். விடுமுறைக்காக வங்காளதேசத்துக்கு வந்திருந்த தருஷி, தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
இந்த நிலையில், வங்காளதேசத்தில் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட சில நடைமுறைகள் முடிந்தபிறகு,  நாளை தருஷியின் உடல் விமானம் மூலம் டில்லிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர், தருஷியின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும்.
இந்தத் தகவல்களை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.