புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் பிபிஇ எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண தொகுப்பைச் சேர்ந்த கவச உடையை, ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கவச உடை உபகரணத்தை ஏற்றுமதி செய்ய, மாதத்திற்கு அதிகபட்சமாக 50 லட்சம் யூனிட்டுகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பிபிஇ கவச உடை உபகரண ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட அளவிற்கான பிபிஇ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மட்டுமே, தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பிபிஇ உபகரணத் தொகுப்பின் இதரப் பொருட்களுக்கான ஏற்றுமதி தடை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் விதமாக, தற்போதைய நிலையில் இந்த பிபிஇ கவச உடையின் கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.