டில்லி

கொரோனா சிகிச்சைக்கும் கோவிஃபார் என்னும் ரெம்டெசிவிர் இந்தியத் தயாரிப்புக்கு மருந்து கட்டுபாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.  இந்தியாவிலும் வைர்ஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.   உலக அளவில் நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது.  இதற்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்குச் சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.    ஆகவே நோயாளிகளுக்கு ஆயுர்வேதம், அலோபதி என அனைத்து வகைகளிலும் வழக்கமான பொது மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான கிலீட் நிறுவனம் ரெம்டெசிவிர் என்னும் ஒரு மருந்தை கொரோனா சிகிச்சைக்கு கண்டுபிடித்துள்ளது.  இதற்கு ஐரோப்பிய நாடுகள் மருந்து ஆணையம் மற்றும் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளன.    இந்த வகையில்  ஒரு மருந்தை இந்திய  நிறுவனமான ஹெட்ரோ நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்துக்கு கோவிஃபார் எனப் பெயரிடப்பட்டுள்ளது.   இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த மருந்து 100 மிலி அளவுக்கு ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தாகும்  இதை ஐதராபாத்தில் உள்ள ஹெட்ரோ நிறுவனத்தின் உற்பத்தி சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் மருந்து உற்பத்தியாகி விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.  கோவிஃபார் மருந்து விலை ரூ.5000 முதல் ரூ.6000 வரை இருக்கும் எனவும்.  இந்த மருந்தை நோயாளியின் அனுமதிக்கு பிறகே செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஃபெபி ஃப்ளு என்னும் மருந்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில்  இது கொரோனா சிகிச்சைக்கான இரண்டாம் மருந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.