டில்லி

கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.  இந்த வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறிந்து பாதிக்கப்பட்டோரை உடனடியாக தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.  இந்த சோதனையை அரசு மற்றும் தனியார் சோதனை நிலையங்கள் நடத்தி வருகின்றன.

தற்போதுள்ள நிலையில் சோதனை சாலைகளின் எண்ணிக்கை மிகவும் பற்றாக்குறையில் உள்ளதால் பல தனியார் நிறுவனங்களுக்கு சோதனை செய்யப் பல உலக நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.  அவ்வகையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் 24 மணி நேரத்துக்குள் தனியார் நிறுவனங்களுக்கு கோவிட் 19 சோதனைக்கு அனுமதி அளித்து வருகிறது.

தற்போது இந்தியாவிலும் கொரோனா  பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   எனவே சோதனை நிலையங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.  ஆகவே பிப்ரவரி மாதம் முதல் வாரம் முதல் இந்த சோதனைக்கான உபகரணங்கள் கோரி சம்பந்தப்பட்ட அரசின் அனைத்து துறைகளுக்கும் பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன.

ஆனால் இதுவரை இந்த சோதனை நிலையங்களுக்கு அனுமதி அளித்து உபகரணங்களை அரசின் எந்த ஒரு துறையும் அளிக்காமல் உள்ளது.   அத்துடன் இந்த சோதனை செய்முறை குறித்த விளக்கங்களையும் வழிமுறைகளையும் இது வரை அரசு வெளியிடவில்லை.   இது குறித்து இதுவரை சுமார் 9 நிறுவனங்கள் அரசுக்கு விண்ணப்பம் அளித்துள்ள போதிலும் அவர்களுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இத்தகைய நிறுவனங்களில் ஒன்றான டிரிவிட்ரான் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் வேலு, ”தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அதிக அளவில் சோதனை உபகரணங்கள் மற்றும் சோதனை நிலையங்கள் தேவைப்படுகின்றன.   அமெரிக்காவில் சோதனைகளை ஆரம்பத்தில் சரியாகச் செய்யாததால் தற்போது கோவிட் 19 பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்க அரசு சோதனை உபகரணங்கள் மற்றும் தனியார் சோதனை நிலையங்களுக்கு அனுமதி எனப் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்திலேயே இதைக் கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.  ஆனால் இந்திய அரசு எங்களுடன் ஒத்துழைக்காமல் உள்ளது.

எங்களில் பல நிறுவனங்கள் ஏற்கனவே டெங்கு, சிக்கன் குனியா, எச்பிவி, டிபி போன்ற நோய்களுக்கான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.  எங்களிடம் உள்ள அனைத்து சோதனை உபகரணங்களும் ஏற்கனவே அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன.  எனவே இவற்றைக் கொண்டே எங்களால் கோவிட் 19 சோதனைகளை திறம்படச் செய்ய முடியும்.  ஆயினும் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து, “கோவிட் 19 பரவுதலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறித்து நேற்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தது மகிழ்ச்சியை அளித்துள்ளது.   ஆனால் சோதனை நடத்த இந்த நிறுவனங்களை  அரசு காக்க வைத்திருப்பது வருந்தத்தக்கது.  அரசு விரைவில் அனுமதி அளித்தால் மட்டுமே இது மக்களுக்கு நல்ல பயன் அளிக்கும்” என ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.