புதுடெல்லி: இந்திய நிலப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக்கில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன ராணுவத்தால் கொல்லப்பட்டதையடுத்து, எந்தக் குறிப்பிடத்தக்க எதிர்வினையும் ஆற்றாத மோடி அரசு, பொருளாதார ரீதியிலான சில நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. அவற்றிலும் பல, திட்டமிடப்படாத மற்றும் பயன்விளைவுகளைத் தராத நடவடிக்கைகள் என்று விமர்சிக்கப்படுகின்றன.
சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, மேக் இன் இந்தியா திட்டத்தின்படி உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நிலப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்ரமித்திருக்கும் சீன நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.
இத்தகைய நடவடிக்கையால் ஏற்படும் வியாபார பாதிப்பு மற்றும் விளைவுகளை மதிப்பிடுவதற்காக உயர்மட்டக் அளவிலான கலந்துரையாடல் செயல்முறை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.