மெக்கா வர சவுதி அரேபிய அரசு தடை : இந்தியாவுக்கு ரூ.3000 கோடி இழப்பு
டில்லி
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உம்ரா பயணத்துக்கு மெக்கா வர சவுதி அரேபிய அரசு தடை விதித்ததால் இந்திய பயண ஏற்பாட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு வருடத்துக்கு ஒரு முறை ஹஜ் பயணம் செல்வதைப் போல் மாதம் ஒரு முறை உம்ரா பயணம் செய்வது வழக்கம். இதற்கு உலகெங்கும் உள்ள பல நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பயணிகள் மெக்கா செல்வார்கள். அவர்களுக்கு சவுதி அரேபிய அரசு தற்காலிக விசா வழங்கி மெக்கா வர அனுமதி அளித்து வந்தது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது. தென் கொரியா, இத்தாலி, ஜப்பான், தைவான், ஹங்காங், ஈரான், நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உளது. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் சுமார் 220 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உம்ரா பயணம் செய்ய அளிக்கப்படும் தற்காலிக விசா வழங்குவதை சவுதி அரேபிய அரசு நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சுமுகமான நிலை அடையும் வரை விசா வழங்கப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் ஹஜ் பயணம் தொடங்க உள்ள நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உம்ரா மற்றும் ஹஜ் பயணத்தை இந்தியர்களும் மேற்கொள்ளுகின்றனர். சவுதி அரேபியாவின் இந்த திடீர் முடிவு இந்தியாவில் உள்ள பயண ஏற்பட்டார்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் சவுகத் இப்ராகிம் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அப்போது அவர், “சவுதி அரசு பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறு அறிவித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரைச் சவுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. ஆகவே இந்த தடையை அடுத்த ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் என மாற்ற வேண்டும்.
இந்த பயணத்துக்காக இன்னும் டிக்கட் பதிவு செய்யவில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்டால் எங்களுக்கு விமான நிறுவனம் பணத்தைத் திருப்பி அளிக்காது. நாங்கள் பயணக் கட்டணம் குறையும் என்பதால் வெகு நாட்களுக்கு முன்பே பதிவு செய்வது வழக்கமாகும். தற்போது தடை எப்போது நீக்கப்படும் என்பது தெரியாததால் டிக்கட் பதிவு செய்ய முடியவில்லை.
அத்துடன் தங்குமிடம் மற்றும் விசாவுக்கு நாங்கள் செலுத்தும் பணமும் திரும்பக் கிடைக்காது. மொத்தத்தில் எங்களுக்கு இந்த தடை உத்தரவால் ரூ.3000 கோடி வரை இழப்பு ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.