கான்பெர்ரா, ஆஸ்திரேலியா

விநாயகர் ஆட்டு மாமிசம் உண்பதாக ஆஸ்திரேலியாவில் வெளியான விளம்பரத்துக்கு இந்தியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆட்டு இறைச்சி விற்கும் நிறுவனம் மீட் அண்ட் லைவ்ஸ்டாக் ஆஸ்திரேலியா ஆகும்.   அந்த நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பர வீடியோ வெளியிட்டது.   அதில் இந்துக்களால் பெரிதும் வணங்கப்படும் விநாயகரும் மற்ற மதக் கடவுள்களும், ஒன்று சேர்ந்து விருந்து உட்கொள்ளுவதைப் போல காட்டப்பட்டிருந்தது.  அந்த விருந்தில் ஆட்டு இறைச்சியை விநாயகர் உட்கொள்ளுகிறார். பிறகு முடிவில் அனைத்து மதங்களையும் ஒன்றிணைப்பது எங்கள் நிறுவனத்தின் ஆட்டு இறைச்சியே என சொல்லப்படுகிறது.

இந்த விளம்பரம் அங்குள்ள இந்திய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  அது தங்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி பல கண்டனக் கூட்டங்களை இந்தியர்கள் நடத்தி, அந்த நிறுவனத்திடம் அந்த விளம்பரத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.  இது பற்றி அறிந்த இந்திய தூதரகம், இந்திய அரசின் சார்பில் ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்த நிறுவனத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

உடனடியாக அந்த நிறுவனம் இந்த விளம்பரத்தை திரும்பப் பெறவேண்டும், எனவும் அப்படிப் பெறவில்லை எனில் ஆஸ்திரேலிய அரசு தலையிட்டு அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=PcyffOn0bu8]