டாக்கா: இந்திய ஹை கமிஷனரிடமிருந்து கடந்த 4 மாதங்களாக பலமுறை சந்திப்பிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவரை சந்திக்கவில்லை என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
‘போரர் ககோஜ்’ என்ற பெயருடைய அந்தப் பிரபல தினசரி பத்திரிகை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், ஷேக் ஹசினா மீண்டும் பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட பிறகு, இந்தியா சார்பிலான திட்டங்கள் அனைத்தும், வங்கதேசத்தில் தேக்கமடைந்துள்ளன.
மாறாக, சீனா தொடர்பான திட்டங்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பதுடன், அத்திட்டங்கள் வேகம் பிடிக்கின்றன.
“இந்தியா சார்பிலிருந்து கவலை தெரிவிக்கப்பட்டும், சிலெட்டில் விமான நிலைய டெர்மினல் கட்டடம் கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கியது வங்கதேச அரசு. வங்கதேசத்திற்கான இந்திய ஹை கமிஷனர் ரிவா கங்குலி தாஸ், கடந்த 4 மாதங்களாக, ஷேக் ஹசினாவுடனான சந்திப்பிற்கு முயற்சித்தும் அவருக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், இந்தியா சார்பாக அளிக்கப்பட்ட கொரோனா உதவிக்கும் வங்கதேசம் நன்றி தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது அப்பத்திரிகை.
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்விகளுள் இதுவும் ஒன்றென விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் பலர்.