ஜப்பான் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் & பெண்கள் ஹாக்கி அணிகள் விளையாடும்..!

புபனேஷ்வர்: ஜப்பானில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதிபெற்றுள்ளது.

மொத்தம் 12 அணிகள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில், ஏற்கனவே 5 அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், இந்திய அணியும் எப்படியும் உள்ளே நுழைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போதைய நிலையில், இந்திய அணி உலக தரநிலையில் 5வது இடத்தில் உள்ளது. உலகத் தரநிலையில் 22வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவுடன் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதியது இந்திய அணி.

மொத்தம் இரண்டு போட்டிகளாக நடத்தப்பட்ட இதில், முதல் போட்டியில் 4-2 என்ற கணக்கிலும், இரண்டாவது போட்டியில் 7-1 என்ற கணக்கிலும் வென்று அசத்தியது இந்திய அணி.

இதன்மூலம் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, 11-3 என்ற கோல் விகிதம் கணக்கிடப்பட்டு, ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தகுதிபெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துகொண்டது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இதுவரை தான் கலந்துகொண்ட ஒலிம்பிக் போட்டிகளில், மொத்தம் 8 தங்கங்கள், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலங்கள் என்ற பதக்க வரலாற்றை வைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில், சிறப்பாக செயல்பட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணியும், ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.