கிடைத்தது 1 மாதகால விடுமுறை – இல்லம் திரும்பும் ஹாக்கி வீரர் & வீராங்கனைகள்!

பெங்களூரு: கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெங்களூரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்ட இந்திய ஹாக்கி வீரர் – வீராங்கனைகள், ஒருமாத கால விடுறையில் தத்தம் இல்லங்களுக்குத் திரும்புகின்றனர்.

இதுகுறித்து கூறப்படுவதாவது; டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக, இந்திய ஹாக்கி வீரர்-வீராங்கனைகள் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதேசமயம், கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் அனைவருமே முகாம்களில் முடங்கினர்.

அதேசமயம், ஒலிம்பிக் போட்டியும் அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டதால், முகாமில் தங்கியிருந்த வீரர்-வீராங்கனைகள் அனைவரும் ஒருமாத கால ஓய்வில், தத்தம் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்தாக் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக, உறுதியான மனநிலையில், கடினமான சூழலை சிறப்பாக கையாண்டனர் இந்திய வீரர்-வீராங்கனைகள். இதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. பயிற்சியாளர்களுடன் கலந்துபேசிய பின்னரே, ஓய்வு குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.