டாக்கா: இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பாக வங்கதேசத்தினர் குடியேறுகின்ற விஷயம்தான் பெரிதாகப் பெசப்பட்டு வரும் நிலையில், இப்போது இந்தியர்கள் அவ்வாறு அங்குக் குடியேறுவதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

குடியுரிமையைப் பதிவு செய்வதில் மிகப்பெரும் சிக்கலை சந்திக்குமளவு வங்கதேசத்தினர் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளது தற்போது மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் பிரச்சாரங்களில் கூட அதிகமாக எதிரொலித்தது.

அதேவேளை, சுமார் 5 லட்சம் பிஹாரி மற்றும் இந்தி பேசும் இந்தியர்கள் அங்குக் குடியேறியுள்ளதாக ஊடகங்கள் கவலை தெரிவிக்கின்றன.

‘பங்களாதேஷ் பிரநிதின்‘ என்ற பத்திரிகையின் கூற்றுப்படி நாளுக்கு நாள் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், மொத்தமாக பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டில் இவ்வாறு வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.

அங்குள்ள இன்னொரு செய்தி நிறுவனம், இவ்வாறான குடியேற்றம், வங்காளத்தின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகி வருகிறதெனக் கூறுவதோடு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்தே பெரும்பான்மையோர் வருகின்றனர் என்கிறது.

இரண்டு நாடுகளுக்கும் சவாலாக இருக்கும் இந்த அச்சுறுத்தலை அந்தந்த நாட்டு அரசாங்கமும், ஊடகங்களும் தற்போது தீவிர கவனத்திற்கு உட்படுத்தி வருகின்றன.