2 பேருக்கு கொரோனா – ஒலிம்பிக் தகுதிச்சுற்றிலிருந்து விலகிய இந்திய ஜூடோ அணி!

புதுடெல்லி: இந்தியாவின் 2 ஜூடோ வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ஜூடோ அணி.

இந்திய ஜூடோ நட்சத்திரங்களான அஜய் யாதவ் மற்றும் ரிது ஆகியோருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, கிர்கிசிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக்கில், ஒலிம்பிக் தகுதிக்கான ஜூடோ போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, 15 பேர் கொண்ட இந்திய ஜூடோ அணி, மோசமான சூழலை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.

அஜய் யாதவ் 73 கிலோ எடைப்பிரிவிலும், ரிது 52 கிலோ எடைப்பிரிவிலும் இடம் பெற்றிருந்தனர். ஒரு வைரஸ் பரவலால், இந்திய விளையாட்டு அணி ஒன்று, ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளிலிருந்து விலகுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் & 4 பயிற்சியாளர்கள், முதல் பரிசோதனையில் நெகடிவ் முடிவுகளையே பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.