புதுடெல்லி: இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிகரீதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘டோர்னியர் 228’ என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்து துறையின் இயக்குநரகம்(DGCA) சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்த சான்றிதழ் பெற்றதன் வாயிலாக, அந்த விமானத்தை பிராந்திய அளவில் பயணிகள் போக்குவரத்து விமானமாக பயன்படுத்த வழி ஏற்பட்டுள்ளது.

மேலும், இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், DGCA அளித்த சான்றிதழை, ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஏஜென்சியும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்மூலம், இந்த டோர்னியர் 228 விமானத்தை ஐரோப்பிய கண்டத்திலும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இது ஒரு பெரிய வெற்றி என்று கூறியுள்ளார் DGCA அமைப்பின் தலைவர் அருண் குமார்.