மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-1

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! எச்.பீர்முஹம்மது

மோடி அரசு பதவியேற்றதில் இருந்தே இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் அதனால் எளிதில் கட்டுப்படுத்தப்படும் (Docile)  ஒன்றாக மாறி விட்டன. ஊடக முதலாளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அதற்கேற்ப அதன் ஆசிரியர்களும் வளைக்கப்படுகின்றனர்.

இதற்கான தொடக்கம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலம். 1975 ஜுன் 25  நள்ளிரவில் நாடே ஆழ்ந்து துயில் கொண்ட தருணத்தில் அவசர நிலை பிரகடனத்தை இந்திராகாந்தி அறிவித்தார். அதில் முக்கியமான அம்சம்  இந்தியாவின் எல்லா ஊடகங்களுக்கும் தணிக்கை முறை அமலானது தான்.  அச்சு ஊடகங்கள் அனைத்தும் தங்கள் கடைசி செய்தியை முடிவு செய்தவுடன் பத்திரிகை தணிக்கை அதிகாரியிடம் அதை காட்டி அவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரும் ஊடக அடக்குமுறையாக பார்க்கப்பட்டது. அதுவே திரிந்த, எளிய வடிவத்தில் இன்றைய மோடி காலத்திலும் தொடர்கிறது என்பது வேடிக்கையானது.

ஊடக உலகில் அச்சு ஊடகங்களின் தாக்கம் மறைந்து இப்போது காட்சி ஊடகங்கள் தான் வெகுஜன உளவியலில் அதிக தாக்கத்தை செலுத்துகின்றன. தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலகட்டத்தில் அது அரசின் செய்திகளை மட்டுமே தாங்கிக்கொண்டு இயங்கியது. நிகழ்வுகள் ஒளிபரப்பில் வெறும் ஒளிப்படங்களாக மட்டுமே காட்டப்பட்டன. செய்திகளின் ஒலிப்பதிவு குறைவாகவே இருந்தது. இதனால் பல முக்கிய நிகழ்வுகள், மக்கள் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. 90 களுக்கு பிறகு தான் இந்தியாவில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் 95 க்கு பிறகு இந்தியாவின் எல்லா பிராந்திய மொழிகளிலும் செய்திச்சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் சன் தொலைக்காட்சி செய்திச்சேவையை ஆரம்பித்தது. அதன் முக்கிய குவியம் என்பது 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் நடத்திய  போராட்ட விநோதங்களை ஒளிபரப்பியது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை  அதிமுகவுடன் மீண்டும் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தியதை தமிழ்நாட்டு தலைமை  கண்டித்த நிகழ்வாக அது இருந்தது. அப்போது தான் காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் அகில இந்திய தலைவரின் படத்தை செருப்பால் அடித்தனர்.

கொடும்பாவியை எரித்தனர். கட் அவுட்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த காட்சிகளை சன்டிவி ஒளிபரப்பிய போது தமிழக மக்கள் வித்தியாசமான காட்சி உணர்வை அடைந்தனர். காங்கிரஸ் மீதான பெரும் அதிருப்திக்கும் அது காரணமாக அமைந்தது.  அதே நேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பல மாநிலங்களில் இந்தி சேனல்களும், பிராந்திய மொழி சேனல்களும் ஆரம்பிக்கப்பட்டன. அதே நேரத்தில் அச்சு ஊடகங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் அச்சு ஊடகங்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. குறிப்பாக அதன் தாராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் நிலைபாட்டை  ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.

மேலும் ஹர்ஷத் மேத்தா தலைமையிலான பங்குச்சந்தை ஊழல் குறித்த செய்தி பல நாட்களாக இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்தது. நரசிம்மராவ் அரசாங்கத்தின் மீதான மக்களின் பெரும் அதிருப்திக்கு அன்றைய அச்சு ஊடகங்கள் ஒருவகையில் காரணமாக இருந்தன. தமிழ்நாட்டிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் மீதான மக்களின் பெரும் கோபத்திற்கு அச்சு ஊடகங்களின் விமர்சன நிலைபாடு முக்கியமாக இருந்தது.

அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் வழிகாட்டு நெறிமுறைகளும், அறங்களும் உள்ளன. இந்தியாவில் டிராய் மற்றும்  பிரஸ் கவுன்சில் ஆகியவை ஊடகங்களை நெறிப்படுத்துகின்றன. அச்சு ஊடகங்களை பொறுத்தவரை முந்தைய காலங்களில் ஓரளவு அறச்செயல்பாட்டை பேணியதாக இருந்தன. அவற்றின் ஸ்தாபகர்கள் ஊடகங்களுக்கானவர்களாக இருந்தனர். தி இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி அச்சு ஊடகங்களின் ஸ்தாபகர்கள் தங்களின் வாழ்க்கையை ஊடகத்திற்காக அர்ப்பணித்தனர். சுதந்திர போராட்டக்கால ஊடகச்செயல்பாட்டிலிருந்து தற்போது வரை அவற்றின் பங்களிப்பு நீள்கிறது.

இந்நிலையில் முதலாளித்துவ நுகர்வு காலப்போக்கில் அச்சு மீதான வாசகத்தன்மையை குறைத்தது. இதனால் அச்சு ஊடகங்களின் விற்று முதல் குறைந்து தனியார் மற்றும் அரசின் விளம்பர வருவாயை எதிர்பார்த்து இயங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அவை தள்ளப்பட்டன. இதனால் ஆளும் வர்க்கமும், தனியார்த்துறையும் ஊடகங்களின் மீது தாக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. செய்திகளின் தன்மையையும், போக்கையும், அதன் உள்ளடக்கத்தையும் விளம்பரங்கள் தான் தீர்மானித்தன. இந்நிலையில் அரசை விமர்சித்தால் விளம்பரங்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அச்சு ஊடகங்கள் அரசை அனுசரித்து போகும் சூழல் ஏற்பட்டது. அதே நேரத்தில் விளம்பர வருவாய் மற்றும் பிற நலன்களுக்காக ஆளும் கட்சியை முற்றிலுமாக அனுசரித்தும், அதன் ஊதுகுழலாகவும் செயல்படும் தினசரிகள் இந்தியாவில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தினத்தந்தி அதற்கு ஓர் உதாரணம். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்த  தருணத்தில் வரிந்து கட்டிக்கொண்டு இட்லி சாப்பிட்டார், பந்து விளையாடினார், இன்று வீடு திரும்புகிறார் என்றெல்லாம் அது செய்திகளை வெளியிட்டது.  இது  ஊடக அறங்களுக்கும், தார்மீக நெறிமுறைகளுக்கும், வாசக உறவாடலுக்கு முற்றிலும் எதிரானது.

2000 க்கு பிறகு இந்தியா முழுவதும் செய்தி தொலைக்காட்சிகளின் தாக்கம் அதிகமானது. அதே நேரத்தில் இணையதளத்தின் வரவு காரணமாக செய்தி இணையதளங்கள் தொடங்கப்பட்டன. தெகல்ஹா இணையதள செய்தி இதழுக்கு ஓர் உதாரணம். 2001 ல் தெகல்ஹா இணையதளம் ஆயுத பேர ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான  மத்திய அரசையே ஆட்டம் காண வைத்தது. இந்தியா முழுமைக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அந்த ஆபரேஷன் வாஜ்பாய் அரசின் ஊழலை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருந்தது. இந்நிலையில்  நகர்மயமாக்கல் மற்றும் மக்களின் இடப்பெயர்ச்சி  அச்சு ஊடகங்கள் மீதான வாசிப்பை மட்டுப்படுத்தியது.

நகர்புறத்தின் வாடகை சார்ந்த சிறிய வீட்டிற்கும், கிராமப்புறத்தின் சொந்த வீட்டிற்கும் பத்திரிகை வாசிப்பு சார்ந்து நிறைய இடைவெளிகள் இருந்தன. தினசரிகளை வாசித்து அதனை சேமிக்கும்  இடம் சார்ந்த சிக்கலுக்கு நகர்புற மத்திய தரவர்க்கம் ஆளானது. அதே நேரத்தில் கிராமப்புற எளிய வாசகர்கள் வீடுகளை தாண்டி  பிற செய்தி அறிதல் களங்களுக்கு சென்றார்கள். இதன் காரணமாக அச்சு ஊடகங்கள் விற்பனையில் நாளுக்கு நாள் தேய்மானத்தை சந்தித்தன.  இந்த இடத்தில் தான் இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கிய ஊடக சவால் காத்திருக்கிறது.

(தொடரும்…)

பகுதி-2

https://patrikai.com/indian-media-baffled-by-modi-government-part-2/

கார்ட்டூன் கேலரி