டில்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ-யில் படித்த மாணவர்கள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்காக விசாரிக்க கோரி  மனுத் தாக்கல் செய்தார்..

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. சிபிஎஸ்சி மாணவர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

அவருக்கு ஆதரவாக, தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக  இந்திய மெடிக்கல் கவுன்சிலும் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

மருத்துவ கவுன்சிலிங்கை கொடுக்கப்பட்ட காலஅவகாசத்துக்குள் நடத்தாவிட்டால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  உச்ச நீதிமன்றம், ‘மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன்’ என்று தமிழக அரசிடம் கேள்வியெழுப்பி உள்ளது.

மேலும் தமிழக அரசின் நீட் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதே போன்று தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், சுகாதாரத் துறை அமைச்சக மும் ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில்,

தமிழக மாணவர்களுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த ஒருவரே கோர்ட்டில் நிற்பது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்,  நீட் விவகாரத்தில் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக தமிழக அரசு எதிர்கொள்ளும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.