புதுடில்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) கடந்த 23ம் தேதியன்று அறிவித்த குழுக்களில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் ஏ- குழுமத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் உலக நம்பர் 1 ஆஸ்திரேலியாவுடன் இந்தியா அணிவகுத்திருக்கிறது.

ஸ்பெயின், நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகியவை குழுமத்தில் இடம்பெற்றிருக்கும் பிற அணிகளாகும்.

நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டன் மற்றும் உலக நம்பர் 1 நெதர்லாந்துடன் இந்திய பெண்கள் அணி ஏ-குழுமத்தில் இடம்பிடித்தது.  ஏ-குழுமத்தில்  உள்ள மற்ற அணிகள் ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகும்.

ஆண்கள் அணிக்கான பி-குழுமத்தில் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா  இடம் பெற்றுள்ளது.

உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, இந்த மாத தொடக்கத்தில் புவனேஸ்வரில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் ரஷ்யாவை 11-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.

பெண்கள் அணிக்கான பி-குழுமத்தில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், சீனா மற்றும் ஜப்பான் இடம் பெற்றிருக்கிறது.

உலகின் ஒன்பதாவது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி புவனேஸ்வரில் நடந்த தகுதிச் சுற்றில் அமெரிக்காவை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.