86 வருட சாதனையை முறியடித்த இந்திய ஹாக்கி அணி: 26-0 கோல்கள் கணக்கில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஹாக்கி பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஆண்கள் அணி 26 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று 86 வருட சாதனையை முறியடித்துள்ளது. ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருபீந்தர் பால் சிங் 5 கோல்களை அடித்து அசத்தினார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணியை எதிர்கொண்டது.

indiahockey

ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 26 -0 என்ற கோல்கள் எடுத்து ஹாங்காங் அணியை வீழ்த்தியது. அணியின் ரூபீந்தர் பால் சிங் 5 கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் 4 கோல்களும், ஆகாஷ்தீப் சிங் 3 கோல்களும், வருண் குமார் மற்றும் மன்ப்ரீத் சிங் தலா 2 கோல்களும் அடித்தனர். இவர்களை தொடர்ந்து சுனில் எஸ்.வி, சுரேந்தர் குமார், விவேக் சாகர் பிரசாத், அமித் ரோகிதாஸ் உள்ளிட்டோரும் கோல் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா கிட்டத்தட்ட 86 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளது. 1932ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. அப்போது 26- 1 என்ற கோல்கள் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிப்பெற்றது சாதனையாக இருந்தது. தற்போது ஆசிய போட்டியில் ஹாங்காங் அணியை 26-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தனது சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

இதற்கு முன்னதாக சர்வதேச ஹாக்கிப் போட்டியில் நியூசிலாந்து அணி, ஒசினியாவின் சமோ அணியை 36-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இந்தியா தொடர்ந்து 2வது வெற்றியை பெற்றுள்ளது. 1982ம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், இந்தியா 12 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.