ஆஸ்திரேலியாவுக்கு குடியேறி  கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் இந்தியர்கள்

கான்பெரா

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர்கள் 18000 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி உள்ளனர்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு ஏராளமானோர் குடி பெயர்ந்துள்ளனர்.  குறிப்பாக பிரிட்டன், இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் குடி புகுந்துள்ளனர்.   இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர்.   இது குறித்த கணக்கெடுப்பு ஒன்றை ஆஸ்திரேலிய புள்ளிவிவர வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மக்களில் முதல் இடத்தில் பிரிட்டன் மற்றும் இரண்டாம் இடத்தில் சீனா மற்றும் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளன.   கடந்த 2018 ஆம் வருடக் கணக்கெடுப்பின்படி சுமார் 5,92,000க்கும் அதிகமான இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.  கடந்த 2016 முதல் இந்தியாவில் இருந்து குடி பெயர்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அதைப் போல் இந்திய மொழிகள் பேசுவோரில் இந்தி மொழி பேசுவோர் 1,59,652 ஆக முதல் இடத்தில் உள்ளனர். பஞ்சாபி மொழி பேசும் 1,32,496 பேர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.  அதற்கு அடுத்தபடியாக தமிழ் (73,161), வங்க மொழி (54,566), மலையாளம் (53206), குஜராத்தி (52,888), ஆகிய மொழிகள் உள்ளன.

வெளிநாடு வாழ் மக்கள் 1,12,300 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி உள்ளனர்.  அதில் அதிக அளவில் வருமானம் ஈட்டியதாக ஐந்து நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இதில் பிரிட்டன் மக்கள் 21000 கோடி டாலர்களுடன் முதல் இடத்திலும், இந்தியா 18000 கோடி டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.  அடுத்ததாக 9000 கோடியுடன் சீனா, 6400 கோடியுடன் தென் ஆப்ரிக்கா மற்றும் 5700 கோடியுடன் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.