டில்லியில் ராணுவம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்கள்

டில்லி

 இந்திய ராணுவம் டில்லி நகரில் 900 படுக்கையுடன் கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது.

சீன நாட்டின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் உள்ளது கண்டறியப்பட்டது.   தற்போது சீனாவின் பல நகரங்களிலும் இந்த வைரஸ் பரவியதை அடுத்து இந்நகரில் உள்ளோர் தனிமைப் படுத்தப்பட்டனர்.  இந்த வைரஸ் உலகின் வேறு பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக சுகாதார மையம்  அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.

வுகான் நகரில் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வர நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றாளது.  இந்த விமானம் சுமார் 300 பயணிகளுடன் இன்று பிற்பகல் 2 மணிக்கு டில்லி வர உள்ளது. இதில் வரும பயணிகளைத் தங்க வைத்துக் கண்காணிக்க டில்லி அருகே உள்ள மனோசரில் 300 பேருக்காக முகாம் ஒன்றை இந்திய ராணுவம் அமைத்துள்ளது.

இந்த முகாமில் சுமார் 2 வாரங்கள் தங்க வைக்கப்பட உள்ள பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என ராணுவ மருத்துவர்களால் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.  இதைத் தவிர டில்லியில் உள்ள சாவ்லா பகுதியில் 600 பேர் தங்கக் கூடிய வகையில் மற்றொரு முகாமை ராணுவம் அமைத்துள்ளது.

போர்க்காலத்திலும், பேரிடர் காலத்திலும், எல்லையிலும் நாட்டிலும் தொண்டாற்றும் இந்திய ராணுவத்தினர் தற்போதும் தொண்டாற்ற முன் வந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.