சுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை அட்டூழியம்

நெடுந்தீவு:

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் முகாமிட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்கிறது.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், பின்னர் அவர்களை விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றுள்ள நிலையில் 83 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அறிவித்துள்ள நிலையில், 8 மீனவர்களை நேற்று கைது செய்து இருப்பது தமிழக மீனவர்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.