Random image

‘அடேயப்பா…..’: எம்எல்ஏக்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.24.59 லட்சம் ரூபாயாம்…..!

டில்லி:

நாடு முழுவதும் உள்ள எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள் ளது. இதில், கர்நாடக மாநில எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆவென்று வாயைப் பிளக்கின்றனர்.

எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் தொடர்பாக `அசோசியேசன் ஃபார் டெமாகிரடிக் ரிஃபார்ம்ஸ்’ மற்றும் `நேஷனல் எலக்‌ஷன் வாட்ச்’ அமைப்புகள் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டன. ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியான அறிக்கையில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பதவியில் உள்ள 4,086 எம்.எல்.ஏ-க்கள் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு,  எம்.எல்.ஏ-க்களின் படிப்பு; ஆண்டு வருமானம் குறித்த தகவலை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி இந்தியாவில் மொத்தமுள்ள 4,086 எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் 25 லட்சமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் உள்ள 203 எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு 1 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும் சத்தீஸ்கரைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

மொத்த எம்.எல்.ஏ-க்களில் 941 பேர் தங்களின் வருமானம் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கவில்லை.

இதில், 3,145 எம்.எல்.ஏ-க்கள் தங்களது ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர். 941 எம்.எல்.ஏ-க்கள் தங்களது வருமானம் தொடர்பாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்த 3,145 எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம். தென் மாநிலங்களைச் சேர்ந்த 711 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.51.99 லட்சம். இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலங்களை சேர்ந்த 614 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.8.53 லட்சம்.

ஆண் எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 25.85 லட்சமாகவும், பெண் எம்.எல்.ஏ-க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.10.53 லட்சமாகவும் உள்ளது.

மாநில வாரியாக பார்த்தால் கர்நாடக மாநில எம்.எல்.ஏ-க்கள் நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த 203 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1.114 கோடி. குறைந்தபட்சமாக, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 63 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.5.4 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 1,052 எம்.எல்.ஏ-க்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் 31 லட்சமாக உள்ளது.

1,997 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். அவர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 20 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.

குறிப்பாக எட்டாம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்ற 139 எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு 89 லட்சம் ரூபாய் பெறுகின்றனர்.

பட்டப்படிப்பு முடித்தவர்களைவிட 8-ம் வகுப்பு முடித்த எம்.எல்.ஏ-க்கள் அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர். மேலும், கல்வியறிவே இல்லாத எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய் வருமானம் பெறுகின்றனர்.

மொத்த எம்.எல்.ஏ-க்களில் 1,402 பேர் 25 முதல் 50 வயதுடையவர்கள் இவர்களின் சராசரி வருமானம் 18 லட்சம் ரூபாய்.

51 முதல் 80 வயதுடைய 1,727 எம்.எல்.ஏ-க்கள் வருடத்துக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். 80 முதல் 90 வயதுடைய 11 பேர் 87 லட்சமும், 90 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 60 லட்சமும் ஆண்டு வருமானம் பெறுகின்றனர்.

மொத்த எம்.எல்.ஏ-க்களில் 258 பேர் பெண்கள். இவர்கள் ஆண்களைவிடக் குறைவான வருமானமே ஈட்டுகின்றனர்.

மொத்ததில் பட்டதாரி எம்எல்ஏக்களை விட 5 முதல் 8வது வகுப்பு வரை கூட படிக்காத எம்எல்ஏக்களின் வருமானம் அதிகமாக உள்ளது.

397 பேர் விவசாயத்தின் மூலம் தங்களுக்கு வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளனர். ஒரு சதவிகித எம்எல்ஏக்கள் சினிமாவில் நடிப்பதன் மூலமும், பிசினஸ் செய்வதன் மூலமும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ இல்லத்தரசிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் உள்ளனர்.

எது எப்படியோ சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வருமானம் லட்சக்கணக்கில் உள்ளது. ஆனால் மக்களின் வருமானமோ கேள்விக்குறியாகி உள்ளது…