அரிஸோனா:‍ மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பெண் ஒருவர், அரிஸோனா பாலைவனத்தில் தனது 6 வயது மகளை பலிகொடுத்துள்ளார்.

அமெரிக்க எல்லையில் உள்ள அரிஸோனா பாலைவனம் வழியே, ‍அந்நாட்டிற்குள் நுழைய முயற்சித்தனர் ஒரு குழுவினர். அக்குழுவில் குருப்ரீத் கவுர் என்ற 6 வயதுடைய சிறுமியும் தன் தாயுடன் இருந்தாள்.

அக்குழுவினரை ஒரு அநாதரவான இடத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர் இத்தகைய சட்டவிரோத உள்நுழைவு முயற்சிக்கு உதவி செய்யும் கடத்தல் கும்பல்கள். அங்கே தண்ணீர் இன்றி வாடியுள்ளது இந்த இந்திய சிறுமியும், தாயும் அடங்கிய அந்தக் குழு.

இந்நிலையில், தன் மகளை அந்தக் குழுவிடம் விட்டுவிட்டு, தண்ணீர் தேடி சிலருடன் சென்றுள்ளார் அந்த தாய். ஆனால், போன இடத்தில் அவர் வழிமாறிவிட்டார். ஆனால், இங்கோ 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில் தண்ணீரின்றி வாடிய அந்த சிறுமி விரைவிலேயே இறந்துவிட்டார். இவரின் உடலை அமெரிக்க ரோந்துப் படையினர் கண்டறிந்தனர். பின்னர், வழிதவறி தடுமாறி அலைந்த தாயும் கண்டுபிடிக்கப்பட்டார். அவர்கள் திரும்பவும் மெக்சிகோவிற்கே அனுப்பப்பட்டனர்.