சட்ட விரோதமாக ஆட்களை அமெரிக்கா கூட்டிச் சென்ற இந்தியர் கைது

வாஷிங்டன்

ட்ட விரோதமாக அமெரிக்க நாட்டுக்கு ஆட்களை அழைத்துச் சென்ற இந்தியர் கைது செய்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் குடிபுகும் சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பலர் அமெரிக்க நாட்டுக்கு குடி புக விரும்புகின்றனர். அதனால் அங்கு சட்ட விரோதமாக ஆட்களை அழைத்துச் செல்வதும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அழைத்துச் செல்வது அமெரிக்காவில் குற்றம் என்பதால் கண்காணிப்பு அதிகரித்து கைது நடவடிக்கைகள் எடுப்பதும் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்தியாவை சேர்ந்த பவின் படேல் என்னும் 39 வயது இந்திய இளைஞர் இவ்வாறு கடல் வழியாகவும் விண்வழியாகவும் ஆட்களை சட்ட விரோதமாக அமெரிக்க நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவர் மீது சந்தேகம் கொண்ட அமெரிக்க குடிபுகும் துறை அதிகாரிகள் இவரை கண்காணித்து வந்தனர். சமீபத்தில் இவரை அமெரிக்க விமான நிலையத்தில் பிடித்துள்ளனர்.

பவின் படேலிடம் நடந்த விசாரணையில் அவர் தாம் இவ்வாறு சட்ட விரோதமாக ஆறு முறை ஆட்களை அழைத்துச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர் 10000 அமெரிக்க டாலர் பெற்றுள்ளார். இவர் இவ்வாறு இந்தியர்களை மட்டுமின்றி தாய்லாந்து மக்களையும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்ததையும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பவின் படேல் வரும் 18 ஆம் தேதி அன்று கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர் படுத்த உள்ளார். அவர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதால் விசாரணை விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவின் படேல் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.