புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகளின் கூட்டு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை சார்பாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக வடக்கு அரபிக் கடல் பகுதியில், பாகிஸ்தானை ஒட்டிய கடற்பகுதிகளில் பாகிஸ்தான் – சீன நாடுகளின் கூட்டுக் கடற்படைகள் பல்வேறு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

எனவே, இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தியாவின் சிறந்த மற்றும் வலுவான போர்க்கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்தி வைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட இப்போர்க்கப்பல் ஒரு விமானம் தாங்கி கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 44 ஆயிரத்து 500 டன் எடைகொண்ட இந்தக் கப்பல் 284 மீட்டர் நீளமும் கொண்டது.

இக்கப்பலில் மொத்தம் 20 மிக் 29கே ரக போர்விமானங்களை நிறுத்தி வைத்து எதிரிகளை மிரட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.