புதுடெல்லி: சமீபத்தில் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில், 192 பேரின் உயிரைக் காப்பாறறி, 1381 நபர்களுக்கு மருத்துவ உதவியை செய்துள்ளது இந்தியக் கடற்படை.

இதுகுறித்து கூறப்படுவதாவது: இடாய் எனப் பெயரிடப்பட்ட புயல், தென்கிழக்கு ஆஃப்ரிக்காவின் மொசாம்பிக் நாட்டைத் தாக்கியது. இதனால், அங்கு 1000க்கும் மேலானோர் மாண்டு போயினர். கடுமையான பொருட் சேதமும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.

இந்நிலையில், INS Sujatha, ICGS Sarathi மற்றும் INS Shardul என்ற பெயர்களைக் கொண்ட மூன்று இந்தியக் கப்பல்கள், அந்நாட்டில் கடந்த பல நாட்களாக முகாமிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், நிவாரணப் பணிகளை விரிவாக்கும் வகையில், இந்தியக் கப்பலான INS MAGAR, தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மொசாம்பிக் நாட்டிற்கு விரைந்துள்ளது. இந்தியாவின் சேடக் ஹெலிகாப்டரும் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கேயோ இருக்கும் ஒரு நாட்டிற்கு ஓடோடி போய் உதவும் இந்தியக் கடற்படை, தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியை ஓகி புயல் கடுமையாக தாக்கியபோது, ஒன்றுமே செய்யவில்லையே என தமிழகத்தின் பாதிக்கப்பட்ட மக்கள் குரலெழுப்புகின்றனர்.

– மதுரை மாயாண்டி